Saturday, June 20, 2015

விஜய்யின் காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியங்கள்



விஜய்யின் காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியங்கள்

இளையதளபதி விஜய் தற்போது அதிரடி ஆக்சன் படங்களை தொடர்ந்து கொடுத்து வெற்றி பெற்று கொண்டு வந்தாலும், அவர் முதன்முதலாக ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் கோலிவுட்டில் அடையாளம் காணப்பட்டார். விஜய்யின் ஆரம்பகட்ட படங்களை பார்த்தால் இளைஞர்களை கவரும் வகையில் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. விஜய் நடித்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.





பூவே உனக்காக
ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டு வந்த விஜய்யை, அனைத்து தரப்பினர்களும் ரசிக்க காரணமாக இருந்த திரைப்படம் 'பூவே உனக்காக' என்று சொன்னால் அது மிகையாகாது. முதன்முதலாக ஆர்ப்பாட்டம், துள்ளல் இன்றி அமைதியான, அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பை விஜய் பதிவு செய்த படம் என்று இந்த படத்தை கூறலாம். தான் காதலித்த பெண், இன்னொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்ததும், அவர் விரும்பியவருடன் காதலியை சேர்த்து வைத்துவிட்டு கடைசி வரை காதலின் நினைவிலேயே வாழும் அழுத்தமான கேரக்டர் விஜய்க்கு இந்த படத்தில் கிடைத்தது. விஜய்யும் கேரக்டரின் தன்மையை புரிந்து கொண்டு அற்புதமாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி அனைத்து தரப்பினர்களாலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது





லவ் டுடே
முந்தைய படம் போலவே மீண்டும் ஒருமுறை ஆர்ப்பாட்டம் இன்றி விஜய் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியை தேடி போனதால் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் போன கேரக்டரில் விஜய் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இறுதியில் காதலை விட தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகனாக அவர் எடுக்கும் முடிவு காதலர்களுக்கு சோகத்தை தந்தாலும், இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.




ஒன்ஸ்மோர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் விஜய் நடித்த ஒரே படம். பல வருடங்களாக பிரிந்து வாழும் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி ஜோடியை சேர்த்து வைக்க விஜய் எடுக்கும் முயற்சிகளும், போடும் திட்டங்களும் அனைவரும் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும். விஜய்-சிம்ரன் காதல் கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் அற்புதமாக அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





துள்ளாத மனமும் துள்ளும்
விஜய் நடித்த காதல் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவிற்கு அழுத்தமான காட்சி அமைப்புகள் கொண்ட திரைப்படம். சிம்ரனை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் விஜய்யை தவறாக நினைக்கும் வகையில் சூழ்நிலை அமைவதும் பின்னர் கிளைமாக்ஸில் விஜய்யின் நல்ல குணங்களை சிம்ரன் புரிந்து கொள்வதும் இந்த படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று சொல்லும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.





காதலுக்கு மரியாதை
கோலிவுட் திரையுலகில் காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் என்ற ஒரு லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இந்த படம் அந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். பெற்றோர்களுக்காக காதலர்கள் விட்டு கொடுப்பதும், காதலர்களை கிளைமாக்ஸில் பெற்றோர்கள் சேர்த்து வைக்க போராடுவதுமான காட்சிகளை யாரும் மறக்கவே முடியாது. குறிப்பாக கிளைமாக்ஸில் வசனங்கள் அதிகம் இல்லாமல் விஜய், ஷாலினி ,ஸ்ரீவித்யா ஆகியோர் கண்களாலே நடித்திருப்பதும், அதற்கு இசைஞானி போட்ட அற்புதமான பின்னணி இசையும் காலத்தால் அழிக்க முடியாத படமாக இந்த படம் அமைய காரணங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





குஷி
காதலில் ஈகோ இருக்கக்கூடாது என்ற ஒரு கான்செப்ட்டை மட்டும் வைத்து கொண்டு படம் முழுவதையும் ஜாலியாக நகர்த்தியிருப்பார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. விஜய் மற்றும் ஜோதிகாவின் அபாரமான நடிப்பில் உருவான இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





ப்ரெண்ட்ஸ்
நட்பு, காதல் என இரண்டையும் சம அளவில் மதிக்கும் ஒரு கேரக்டரில் விஜய் பேலன்ஸ் செய்து மிகவும் சிறப்பாக நடித்திருந்த படம்தான் இது. நண்பன் சூர்யாவுக்கும் காதலி தேவயானிக்கும் ஏற்படும் பல கருத்துவேறுபாடுகளை சமாளிக்கும் இந்த கேரக்டரை விஜய் தவிர வேறு யாராவது நடிக்க முடிந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.






பிரியமானவளே
இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையே தெரியாமல் அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர் கேரக்டரில் விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார். திருமணத்திற்காக ஒப்பந்தம் போடுவது, மனைவியை ஒப்பந்தம் முடிந்ததும் பிரிய நினைப்பது ஆகியவை முதல் பாதியில் வந்தாலும் பின்னர் கடைசியில் அன்பு, பாசம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளும் வகையில் விஜய்யின் கேரக்டர் சூப்பராக அமைக்கப்பட்டிருக்கும்.





நினைத்தேன் வந்தாய்
தனது கனவு தேவதையான ரம்பாவை விஜய் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் பெறோர்கள் அவருக்கு தேவயானியுடன் நிச்சயம் செய்து விடுவார்கள். பின்னர் தனது கனவில் வந்த் தேவதை தேவயானியின் தங்கை ரம்பாதான் என்பதை அவர் தெரிந்து கொண்டவுடன் நடைபெறும் சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம்தான் 'நினைத்தேன் வந்தாய்





சச்சின்
விஜய் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ஒரே கல்லூரியில் படிக்கும் ஜெனிலியாவை விஜய் முதலில் விரட்டி விரட்டி காதலிப்பார். முதலில் விஜய்யின் காதலை ஏற்றுகொள்ள மறுக்கும் ஜெனிலியா, பின்னர் உண்மையாகவே காதல் வயப்பட்டு தனது காதலை விஜய்யிடம் சொல்லும் நேரத்தில்தான் விஜய் ஒரு கோடீஸ்வரர் என்பது ஜெனிலியாவுக்கு தெரியவரும். இப்போது தனது காதலை கூறினால் பணத்திற்காகத்தான் தான் காதலிப்பதாக விஜய் நினைத்துக்கொள்வார் என்று ஜெனிலியா காதலை சொல்லாமல் மறைப்பதும் இறுதியில் என்ன ஆயிற்று என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லப்பட்ட இந்த படமும் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது ஆக்சன் ஹீரோவாக வெற்றி நடை போட்டு வந்தாலும், காலத்தால் அழியாத படங்களை கொடுக்க வேண்டுமானால் அவ்வப்போது அவர் முழுநீள காதல் படங்களிலும் அவர் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் சமீபத்தில் வெளியான 'காவலன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் விருப்பத்தை அவர் அவ்வப்போது நிறைவேற்றி கொண்டிருந்தாலும் தொடர்ந்து இன்னும் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 courtesy: http://www.indiaglitz.com/






























No comments:

Post a Comment

Popular Posts