Showing posts with label Magazines. Show all posts
Showing posts with label Magazines. Show all posts

Thursday, June 9, 2016

வித்யா... விஜய்யின் பேரிழப்பு!

'விஜய் சின்ன வயசுல ரொம்ப துறுதுறு, அதுவும்  குழந்தையாக இருக்கும்போது  நானும், ஷோபாவும் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்துட்டா  அவ்வளவுதான் எதையாவது தூக்கிப் போட்டு உடைச்சிடுவார். நல்லா ஞாபகம் இருக்கு, அப்போ இளையராஜா இசையில ஷோபா பாட்டு பாடுவாங்க. விஜய்க்கு ஒன்றரை வயசு. அதனால அவரை அழாம பார்த்துக்கிடுற‌ வேலை எனக்கு. 

திருவாரூர்ல இளையராஜா இசைக்கச்சேரி. நான், ஷோபா, விஜய் எல்லோரும் மியூசிக் குழுவோடு டிரெய்ன்ல‌ கிளம்பினோம். திருவாரூர் லாட்ஜ்ல மாடியில்  இருக்கற அறையில் தங்கினோம். கச்சேரிக்குக் கிளம்பற பரபரப்புல இருந்தோம். அப்போ திடீர்னு ஒரு சத்தம். எல்லோரும் பதறி என்னனு  பார்த்தா,  தவழ்ந்துட்டு இருந்த விஜய் மாடிப் படிக்கட்டில் ஸ்லிப் ஆகி உருண்டுட்டு இருக்கார். எங்களுக்கு அதிர்ச்சில மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு. ஓடிப் போய் குழந்தையைத் தூக்கிப் பார்த்தா முகமெல்லாம் அடி. உதடெல்லாம் வீங்கி இருந்துச்சு. நான் பதட்டத்துல இருக்கேன். ஷோபா ஒரே அழுகை, இசைக்குழுவுல இருந்தவங்களும் பயங்கர அப்செட்.
சூழ்நிலையை புரிஞ்சுகிட்ட நான் '' எல்லாரும் கச்சேரிக்கு  போங்க. நான் பார்த்துக்கறேன்"னு தைரியம் சொல்லி அனுப்பி வைச்சேன். உடனே விஜய்யை தூக்கிட்டு திருவாரூரில் இருக்கிற‌ ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு  போனேன். விஜய்க்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தார். 'ஊசி போடணும்"னு டாக்டர் சொல்ல... அவ்வளவுதான் விஜய் அழுகை அதிகமாயிடுச்சு. அன்னிக்கு  திருவாரூரில் ரயில் ஏறியபோது ஆரம்பிச்ச அழுகை சென்னை வரைக்கும் நிக்கவே இல்ல. விஜய்க்கு ஊசியை பார்த்தாலே பயங்கர பயம். இப்போ சண்டைக் காட்சியில ஆக்‌ஷன் காட்டி எதிரிகளை பந்தாடுகிற விஜய்க்கு உடம்பு சரியில்லேன்னு ஊசிபோட வந்தா இப்போகூட எஸ்கேப் ஆயிடுவார். 

சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் விஜய் படித்தார். 'quietly boy'  இதான் ஸ்கூலில் விஜய்யின் நிக்நேம். அந்தளவுக்கு பையன் அமைதி. சத்தம் போட்டு பேசமாட்டார். டீச்சரிடம் ஏதாவது கேட்கணும்னா கையைக்கட்டி பவ்யமா பக்கத்துல போய், சத்தமே கேட்காமல் பேசுவார். விஜய்க்கு காமெடி அவ்வளவா வராது. ஆனா, நண்பர்களோடு இருக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் சொல்லும் காமெடியைக் கேட்டு சத்தம் போட்டு ரசிப்பார். அவரது சிரிப்புச் சத்தம் மட்டும் அறையில் இருந்து கேட்கும்.
அவருக்கு தங்கச்சி வித்யாதான் உலகம். அவளோட தினம் ஒரு வெளையாட்டு வெளையாடுவார். ஒரு கூடையில்  வித்யாவை வைச்சுட்டு தலைக்குமேல் தூக்கிட்டு தலையைச்சுத்தி விளையாடுவார்.  இது ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல... பல நாள் தொடர்கதையா நடந்து வந்துச்சு. ஒருநாள் தலையைச் சுத்தும்போது கைதவறி வித்யா தலை குப்புற விழுந்து விட்டாள் அவ்வளவுதான் 'அம்மா...’னு விஜய் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்ல இருந்தவங்கள்லாம் ஓடிவந்துட்டாங்க.
பயந்துட்டே வித்யாவை தூக்கினோம். ஆனா, ஆச்சர்யம் அவ உடம்புல ஒரு சின்ன கீறல்கூட இல்லை.  இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும்.  வீட்டுக்குவந்த எல்லோரும் 'வித்யாவுக்கு ஆயுசு கெட்டி’னு நெகிழ்ந்து வாழ்த்திட்டுப் போனாங்க. ஆனா,  அந்த வாழ்த்து கொஞ்ச நாள் கூட நிலைக்கல. 

வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம 'அப்பா...'னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு. எங்க குடும்பத்துல ஈடு செய்ய முடியாத இழப்பு... வித்யா!" கண்களும் குரலும் ஒருசேர கலங்குகிறது சந்திரசேகருக்கு!

Saturday, February 6, 2016

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

வர்றான் ‘தெறி’ போலீஸ்ம.கா.செந்தில்குமார்
‘‘செயின் அறுப்பு, கொலை, கொள்ளைனு இன்னைக்கு அவ்வளவு குற்றங்கள். இதுக்கு அரசு, அரசியல், மந்திரி, அதிகாரிகள், அது இதுனு எதுவுமே உடனடிக் காரணம் கிடையாது. வளைச்சு வளைச்சு ரௌடிகளைச் சுட்டாலும் இது அனைத்தும் முடிஞ்சிடாது. முதலில் ஒரு தனி மனிதனா என் கடமை என்ன? நான் முதலில் திருந்தினால் எல்லாம் தானாகவே மாறும். வீட்டைப் பற்றி தெரிஞ்சாதான், ஊர் எனக்குத் தெரியும், நாடு புரியும். வீடே தெரியாமல் வளர்ந்தால்... இந்தக் கருத்தைச் சொல்ல நான் தேர்ந்தெடுத்த   எமோஷனல் என்டர்டெய்னர்தான் ‘தெறி’ ’’... அட்லியின் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு, அவ்வளவு ஆதங்கம். வெரைட்டி விஜய், நடிகராக இயக்குநர் மகேந்திரன், குழந்தை நட்சத்திரமாக மீனாவின் மகள் என ஆச்சர்யங்கள் அடுக்கி ‘தெறி’க்கவிடுகிறார் அட்லி. 

‘‘ ‘நண்பன்’ பட ஷூட்டிங். அப்ப நான் ஷங்கர் சாரின் அசோசியேட் டைரக்டர். அங்கதான் விஜய் அண்ணன் எனக்குப் பழக்கம். ஷூட்டிங்கின் கடைசி நாள், ‘நல்ல கன்டென்ட் வெச்சிருந் தீங்கன்னா எப்ப வேணும்னாலும் சொல்லுங்க தலைவா, நாம பண்ணலாம்’னு சொல்லியிருந்தார். ‘ராஜா ராணி’ ரிலீஸுக்குப் பிறகு சந்திச்சப்ப, கட்டி அணைச்சுக்கிட்டு, ‘எங்க வீட்ல எல்லாருக்கும் ‘ராஜா ராணி’ பிடிச்சிருந்தது’னு சொன்னவர், `தெறி' கதையைச் சொன்னதும், ‘மைண்ட் ப்ளோயிங்ணா... செமையா போகும். பண்ணலாம்’னு சொல்லி அவர் கொடுத்த அந்த தம்ஸ்அப்தான் இப்ப ‘தெறி’யா மாறி இருக்கு.’’
‘‘விஜய்க்கு மீண்டும் ஒரு போலீஸ் ஸ்டோரியா?’’

‘‘நமக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னைனா, நம்மைக் காக்கிற காவல் துறையிடம்தானே போய் நிப்போம். அவங்கதான் தப்பைக் கண்டறியணும்; தட்டிக் கேட்கணும்; அதைச் சரிபண்ணணும். அப்படிப் பட்டவங்க அவ்வளவு சார்மிங்கா, அவ்வளவு மனிதநேயத்தோட இருந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கும்போது தோன்றியதுதான் இந்த ‘தெறி’ லைன். ஆனால், இதுவரை பண்ணாத  ஒரு போலீஸ் ஸ்டோரி பண்ணணும்னா, என்ன பண்ணலாம்? முதல்ல நாம ஒரு போலீஸை எப்படிப் பார்க்கிறோம், மிடுக்கா, விறைப்பா, கோபமா? ஆனால் அப்படி இல்லாம ரொம்ப எமோஷனலா, பயங்கர கனெக்ட டான ஒரு போலீஸ் ஆபீஸர் இருந்தா எப்படி இருக்கும்? நமக்கு ஒரு பிரச்னைனா பக்கத்து வீட்ல இருந்து ஒரு அண்ணன் சப்போர்ட் பண்ண வருவார்ல, அப்படியான ஒரு போலீஸ் ஆபீஸரா இருந்தா எப்படி இருக்கும்? இப்படியான கேள்விக் கான பதில்தான் இந்த ‘தெறி’ போலீஸ்.’’

‘‘எமோஷனல் போலீஸ்னு சொல்றீங்க. ஆனால், விஜய்க்கு அது மட்டுமே போதாதே... ஆக்‌ஷன் அதிரடி வேணுமே?’’

‘‘ `ராஜா ராணி’யில ஆக்‌ஷன் இருக்காது; இதுல ஆக்‌ஷனும் இருக்கும். அவ்வளவுதான். பயங்கரமான ஃபேமிலி படத்துல ஆக்‌ஷனும் மெசேஜும் இருந்தா எப்படி இருக்கும்? எம்.ஜி.ஆர்., ரஜினி சார் படங்களைப் பார்க்கும்போது குழந்தைங்களுக்கு ஒரு விஷயம், ஸ்கூல் பையன்களுக்கு வேறு ஒரு விஷயம், காதலர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு, அப்பா-அம்மாவுக்கு, தாத்தா- பாட்டிக்குனு எட்டு பேர் கொண்ட ஒரு ஃபேமிலி படம் பார்க்கும்போது எல்லாரையும் திருப்திப்படுத்தக்கூடிய சினிமாவா அது இருக்கும். அப்படி 100 சதவிகிதம் என்டர்டெயின்மென்ட் சினிமாவா இருக்கணும்னு நினைச்சேன். அதை இதுக்குள்ள கொண்டுவந்திருக்கேன். அப்படி எல்லாருக்குமான படமா ஒரு முழுமையான சினிமாவா இது இருக்கும்.’’
‘‘ஃபர்ஸ்ட் லுக்ல மூன்றுவிதமான விஜய் படங்கள். இதில் அவருக்கு மூன்று கேரக்டர்களா... வெவ்வேறுவிதமான கெட்அப்களா... என்ன ஸ்பெஷல்?’’

‘‘அது மூணு கேரக்டர்களா இருக்கலாம் அல்லது நாலு, ஐந்துனு மல்ட்டிபிள் ஆக்‌ஷனாக்கூட இருக்கலாம். ட்ரிபுள் பிரதர்ஸ், நெகட்டிவ் கேரக்டர்கள்கூட இருக்கலாம். ஆனா, எல்லாமே இதுவரை அவர் பண்ணாத சுவாரஸ்ய மான கேரக்டர்ஸ். ஒரு ஆளுக்கும் இன்னொரு ஆளுக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்குமோ... அது எல்லாம் இந்த ஒவ்வொரு கேரக்டருக்கும் இருக்கும்.’’

‘‘விஜயை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘விஜய் அண்ணனுடன் நல்ல பழக்கம் இருந்தாலும், ஒரு இயக்குநரா ஒரு சூப்பர் ஸ்டாரை ஹேண்டில் பண்ணும்போது ஒரு தயக்கம் இருக்கும். ஆனா, முதல் நாள்ல இருந்து இப்ப வரை என்னை பயங்கரமான ஒரு கம்ஃபர்ட் ஸோன்லயே வெச்சிருக்கார். `100 அடி உயரம் உள்ள ஒரு பாலத்தில் இருந்து தண்ணியில் டூப் இல்லாமக் குதிச்சார்’னு தனித்தனியா என்னால சொல்ல முடியாது. சின்ன ஸ்மைல்ல இருந்து எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரிஸ்க்கி ஃபைட் வரை... நான் என்ன சொன் னாலும் அதை ஸ்கிரீன்ல கொண்டுவர்றதுக்கு அப்படி ஒரு எஃபர்ட் போடுறார். என் எழுத்தை காட்சியாகக் கடத்துறதுக்குத் தயாரா இருக்கார். எனக்குத் தேவையானதைக் கொடுத்தே ஆகணும்னு டேக்ஸ் போறது, கனகச்சிதமா பிசிறு இல்லாம அந்தக் காட்சி ஓ.கே ஆகுறது வரை மெனக்கெடுறதுனு... அவர் இயக்குநரின் நடிகர்.’’

‘‘இயக்குநர் மகேந்திரன் சார், எந்தத் தருணத்துல ‘தெறி’க்குள் வந்தார்?’’

‘‘ ‘ராஜா ராணி’க்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அவரோட எல்லா படங்களுமேதான். அதை அவர்கிட்டயே சொல்லியிருக்கேன். அவரின் குரல், ஆட்டிட்யூட், அவரோட காஸ்ட்யூம்ஸ், கையசைவுனு அவருக்கே அவருக்குனு உள்ள கனகச்சிதமான அந்த மேனரிசம் எனக்குப் பிடிக்கும். அவர் வாங்கின நடிப்பு, வாங்கிய இசை இன்னும் அதிருது. ஆனாலும் இந்த கேரக்டர்ல அவரை நான் யோசிக்கவே இல்லை. இது படத்துல முக்கியமான கேரக்டர். இதுவரை யாரும் பார்க்காத ஒரு பயங்கரமான பெர்ஃபாமரை உள்ளே கொண்டு வரணும்னு தோணிட்டே இருந்தது. `அது யாரா இருக்கலாம்?’னு யோசனை. அந்தச் சமயத்தில் மகேந்திரன் சாரின் ஒரு பேட்டியைப் பார்த்தேன். ‘நம்ம கேரக்டராவே இருக்காரே, இவரை நடிக்கவைக்கலாமே’னு டக்குனு ஒரு ஸ்பார்க்.’
‘‘நடிக்கணும்னு கேட்டதும் அவர் என்ன சொன்னார்?’’

‘‘‘தம்பி உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும்னு விருப்பப்படுது’னு தயாரிப்பாளர் தாணு சார்தான் பேசினார். ‘எனக்கு `ராஜா ராணி’ ரொம்பப் பிடிச்சிருந்தது. வரச் சொல்லுங்க கேப்போம்’னார். ‘கதை சொல்றேன். அதில் உங்களுக்கு எந்த பார்ட் கனெக்ட் ஆகுதோ... அதுதான் உங்களுக்கு நான் சொல்ல வந்த கேரக்டர். எந்த பார்ட்டும் கனெக்ட் ஆகலைனா கதை எப்படி இருக்குனு மட்டும் சொல்லுங்க’ன்னேன். மூணு மணி நேரம் கதை சொன்னேன். நான் எங்கெங்க காமெடி சொன்னேனோ, அங்கெல்லாம் ஸ்மைல் பண்ணார். நான் எமோஷனலான சீன் சொல்லும்போது கண் கலங்கினார். ஆடியன்ஸ் என்ன ஃபீல் பண்ணணும்னு நினைச்சேனோ, அதை அவர் ஃபீல் பண்ணினார். உண்மையைச் சொல்லணும்னா ‘இந்தப் படம் எல்லாருக்கும் போய் சேரும்'கிற எதிர்வினையை அவர்கிட்டதான் 100 சதவிகிதம் ரிசீவ் பண்ணினேன். ‘எனக்கு கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் இதைப் பண்ணணும்னு நினைச்சது எனக்கே ரொம்ப ஆச்சர்யம்’ன்னார். இவ்வளவு நாள் நடிக்காத, இயல்பாவே தன்னை வெளிப்படுத்திக்க நினைக்காத அவர் இதில் பங்கேற்கிறார்னா, இந்த கேரக்டர் நிச்சயமா அவரை எங்கோ ஓர் இடத்தில் பாதிக்க வெச்சிருக்கு. அந்தப் பாதிப்பை அவர் உங்களுக்குள்ளும் கடத்துவார்.’’

‘‘சமந்தா-ஏமி ஜாக்சன்னு ரெண்டு ஹீரோயின்கள். என்ன சொல்றாங்க?’’

‘‘ஹீரோயின்னா பெர்ஃபார்ம் பண்ணணும். உதாரணத்துக்கு `ராஜா ராணி’ நயன்தாரா-நஸ்ரியா மாதிரி.  அப்படி இதுல ரெண்டு பேருக்குமே பவர்ஃபுல் கேரக்டர்ஸ். அடுத்து ராதிகா மேடம். ‘ஊர்க்காவலன்’ல அவங்க பண்ணின கேரக்டரை ரெஃபரன்ஸா வெச்சு பண்ணியிருக்கேன். பயங்கர ஹியூமரஸா இன்னொசன்ட்டா ஒரு கேரக்டர்... பிச்சிட்டாங்க. பிரபு சார் கடல் மாதிரி. நடிக்கும்போதும் சரி... பேசும் போதும் சரி... நமக்குத் தேவையானதை அள்ளிக்கலாம்.’’

‘‘மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். அப்படி என்ன ஸ்பெஷல் கேரக்டர்?’’

‘‘படத்துல விஜய் அண்ணா, மகேந்திரன் சார்... இவங்க ரெண்டு பேரோட முக்கியத்துவத்துக்கு சமமான கேரக்டர் ஒரு குழந்தைக்கு.  ‘தெய்வத் திருமகள்’ சாரா மாதிரியான கேரக்டர். அஞ்சு வயசுக்குள்ளதான் இருக்கணும். நடிக்கணும், பக்கம் பக்கமாப் பேசணும். நிறைய ஆடிஷன் பண்ணினேன். ஆனால் நம்ம தேடல் இது இல்லைனு தோணிட்டே இருந்துச்சு. ஒருகட்டத்துல பயங்கர அப்செட். ஒருநாள் ‘இந்தக் குழந்தை ஓ.கே-வானு பாருங்க’னு என் மனைவி செல்போன்ல ஒரு போட்டோவை காட்டினாங்க. ‘லைட்டா மீனா மேடம் மாதிரி இருக்கே’னு சொன்னேன். `அவங்க குழந்தையே தான்’னு சொன்னாங்க. மீனா மேடத்திடம் பேசினேன். கொஞ்சம் தயங்கினாங்க.  ‘ `அன்புள்ள ரஜினிகாந்த்’ல நீங்க, இப்ப `தெறி'ல விஜய் அண்ணாகூட உங்க பொண்ணு. உங்க பொண்ணை நான் டெஸ்ட் ஷூட் பண்றேன். அதுவும் உங்க திருப்திக்குத்தான்’னு சொன்னேன். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவைப் பார்த்துட்டு, ‘தெய்வக் குழந்தைமா இது’ன்னார் தாணு சார். நீங்களும் அதை ஃபீல் பண்ணுவீங்க.’’
‘‘ ‘ராஜா ராணி’ ரிலீஸான சமயத்தில் அது `மௌனராகம்’ மாதிரியே இருந்ததுனு சொன்னாங்க. இப்ப ‘தெறி’, `சத்ரியன்' படத் தழுவல்னு சொல்றாங்களே?’’

‘‘ ‘லவ் ஆஃப்டர் லவ் ஃபெயிலியர்’ங்கிறதுதான் `ராஜா ராணி' கன்டென்ட். கடந்தகாலக் காதலில் இருந்து வெளியே வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் எல்லாருக்கும் போய் சேர்ந்ததால்தான் அது அவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு. அந்தப் படத்தைப் பார்த்துட்டு பேசினவங்களைவிட அழுதவங்க நிறையப் பேர். ‘கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னவ, `ராஜா ராணி’ பார்த்துட்டு மறுநாள் காலையில ஏழு மணிக்கு எழுப்பி `மாப்ள பாருங்க’னு சொன்னதா ஒரு அம்மா பேசினாங்க.  ஒரு படத்துல எமோஷனல் வேல்யூவை கரெக்டா கேரி பண்ணினா, அது எங்கேயோ யாரையோ திருத்துது. அதுதான் முக்கியம். தனிமனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால்... எல்லாரையும் திருத்துவதற்குச் சமம். இதுதான் `தெறி’. இப்படி நாம என்னதான் புதுசா சொன்னாலும் தழுவல், நழுவல்னு சொல்ற வங்களுக்கு கோபமா எங்கேயும் போய் பதில் பேசவே முடியாது.  ஏன்னா,  அது  பார்க்கிறவங்களோட பார்வை. அவங்க பார்வைக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்னா, என் பார்வையை நான் மறக்க ஆரம்பிச்சிடுவேன்!’’

Saturday, July 6, 2013

Thalaivaa vikatan interview update:

தலைவா ஜுரம் இப்போதுதான் விஜய் ரசிகர்களிடம் அலைஅடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால், அதற்குள் 'ஜில்லா’வுக்குள் நுழைந்துவிட்டார் விஜய். 39-வது பிறந்த நாளுக்குக் குவிந்த வாழ்த்துகள் அவரை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தியிருக்கிறது!

''விஜய் 29 வயசுல என்ன நினைச்சார்? 39-ல என்ன நினைக்கிறார்? 49-ல என்னவாக இருப்பார்?''

''ண்ணா... ஒன் மார்க் கேள்வியில் இருந்து ஆரம்பிங்ணா... எடுத்ததுமே பாயுறீங்களே? 30 வயசுங்கிறது, யாருக்குமே ஒரு திருப்புமுனையா இருக்கும். எனக்குச் சரியா 29 வயசுல, 'திருமலை’ மூலமா அந்தத் திருப்புமுனை வந்தது. அதுக்கு முன்னாடி 'லவ்டுடே’னு ஃபுல் காதல் ஃபீலிங்ஸ்ல நடிப்பேன். இல்லைன்னா, 'பகவதி’னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படமா நடிப்பேன். ஆனா, 'திருமலை’தான் சினிமாவில் எனக்கான ரூட் என்னன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டது. ரசிகர்கள் என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாங்க? நாம எதுல ஃபோகஸ் பண்ணணும்னு அப்புறம்தான் ஒரு ஐடியாவுக்கு வந்தேன். அதுவரை என் வாழ்க்கையில் எதுவுமே திட்டமிட்டு நடக்கலை. எல்லாமே தானா நடந்துச்சு. அப்படி நடந்ததில் நல்ல விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணதால், இதோ இப்ப 39 வயசுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அன்பான குடும்பம், ஆசைப்பட்ட கேரியர், ஆதரவான ரசிகர்கள்... இதுக்கு மேல என்ன வேணும்? ஆனா, இப்போ இப்படி இருப்பேன்னு 29 வயசுல நினைக் கலை. அப்புறம் எதுக்கு 49-வது வயசைப் பத்தி இப்பவே கவலைப்பட்டுக்கிட்டு? எல்லாம் அதுவா தன்னால நடக்கும்ணா... பார்த்துக்கலாம்!'' 

'' 'காவலன்’ தொடங்கி 'துப்பாக்கி’ வரை ஹிட் ரெக்கார்ட்ஸ். 'தலைவா’ அதைத் தக்கவைக்குமா?''
''நடிகர் விஜய் மாஸ்னா, டைரக்டர் விஜய் க்ளாஸ். ரெண்டும் கலந்து படம் நல்லா வந்திருக்கு. 'தலைவா’ முழுசாப் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்!''

'' 'ஜில்லா’வில் மோகன்லால் என்ன சொல்றார்?''

''கேரள சினிமாவோட சூப்பர் ஸ்டார் அவர் தானானு ஆச்சர்யமா இருக்கு. செம சிம்பிள்... ரொம்ப கூல். ஷூட்டிங்ல சின்ன பிரேக் கிடைச்சாலும் சுத்தி இருக்கிற எல்லாரையும் பக்கத்துல உட்காரவெச்சுட்டு அந்தக் காலத்து சினிமாவையும், அப்போ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் கச்சேரி கணக்கா கலகலனு அடுக்குவார். கேட்க ஜாலியா இருந்தாலும், ஒரு நடிகன் கத்துக்க வேண்டிய பாடங்களும் அதில் இருக்கும். ஒரு நாள் 'சாப்பாட்டுல உனக்கு என்ன பிடிக்கும்?’னு கேட்டார். 'தோசை’னு சொன்னேன். மறுநாளே கேரவன்ல எனக்கே எனக்குன்னு ஸ்பெஷலா தோசை ஊத்திக் கொடுத்தார். இப்போ நான் மோகன்லால் நடிப் புக்கு மட்டுமில்லை; தோசைக்கும் பயங்கர ஃபேன்!''
''இப்போ தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹீரோக்கள். இதுக்கு நடுவுல உங்க மார்க்கெட் வேல்யூ எப்படி இருக்கு?''

''ரொம்ப ஆரோக்கியமா இருக்குங்ணா... ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சமீபத்துல என் வீட்டுக்கு நிறையக் குழந்தைகள் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் நாலஞ்சு வயசுக்குள்ளதான் இருக்கும். என்னைப் பார்த்ததும் குஷியாகி 'ஹைய்யா’னு எல்லாரும் கோரஸாக் கைத்தட்டி சந்தோஷமா சிரிச்சப்ப, எனக்கு அப்படியே கண்ணு கலங்கிருச்சு. எல்லாரையும் பக்கத்துல இழுத்துவெச்சுக்கிட்டேன். ஒண்ணு, என் கன்னத்தைக் கிள்ளுது, இன்னொண்ணு, மூக்கைப் பிடிச்சு இழுக்குது... ''வாலுப் பசங்க. 'உங்களை டி.வி-ல பார்த்தாலே துள்ளிக் குதிப்பாங்க. நேர்ல பார்த்தா கேக்கவா வேணும்’னு பூரிக்குறாங்க அந்தக் குழந்தைகளோட அப்பா-அம்மாக்கள். எந்த மார்க்கெட்டா இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிடிச்ச ஒரு விஷயம்தான் பெரிய ரீச் ஆகும். அந்தக் குழந்தைகளோட சிரிப்புதாங்க, என் மார்க்கெட் வேல்யூ. இன்னொண்ணு சொல்லவா..? இப்போ நிறைய ஹீரோக்கள் இருக்கலாம். என் ரசிகர்கள் பலரேகூட, அந்த ஹீரோக்கள் படத்தை யும் ரசிக்கலாம். ஆனா, அந்த ஹீரோக்கள் படத்தைப் பார்க்கிற எல்லாருக்கும், என் படம் பிடிக்கும். அது விஜய் மேஜிக்!

பொதுவா ரசிகர்கள் தங்களோட ஹீரோவை நினைச்சுப் பொறாமைப்படுவாங்க. ஆனா, நான் எனக்குக் கிடைச்ச ரசிகர்களை நினைச்சுப் பொறாமைப் படுறேன். ஏன்னா, அவங்க கொடி பிடிக்கிறதும் தோரணம் கட்டுறதை மட்டும் செய்யலை. குடிக்க பால் இல்லாமத் தவிக்கிற குழந்தைகளுக்கும், வடிக்க அரிசி இல்லாமக் கஷ்டப்படுற ஏழைகளுக்கும் ஓடிப்போய் உதவுறாங்க... அதனாலதான்! இங்கே ஒன் மோர் விஷயம் ப்ளீஸ்... என் மார்க்கெட் வேல்யூ உச்சத்தில் இருக்கிறப்பவும் சரி, மத்த நேரங்கள்லயும் சரி... எப்பவுமே நான் ஸ்டார் இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருந்தது இல்லை. இப்பக்கூட யாரும் என் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறது இல்லை. அதனால், இந்த ஸ்டார் வேல்யூ பத்தி நான் கவலைப்படுறது இல்லை!''

''ஹிட் படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடிய காலத்தில் சினிமாவில் அறிமுகமானீங்க. இப்போ ஒரு படத்தின் டிரெய்லர் யூடியூபில் ஒரு லட்சம் ஹிட் அள்ளும் சமயத்துல பீக்ல இருக்கீங்க. மாறிட்டே இருக்கிற சினிமா டிரெண்டை எப்படிப் பார்க்கிறீங்க?''

''என்னைப் பொறுத்தவரை, சினிமா ரொம்ப எமோஷனல் மீடியம். ஒரு ரசிகன் தியேட்டருக்கு வந்தா, அவனை நாம தியேட்டர் சீட்ல உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத் துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக்.

ஆனா இப்போ, 'மேக்கிங்’, 'புரமோஷன்’னு படப்பிடிப்பு ரகசியங்களை ஜஸ்ட் லைக் தட் ஷேர் பண்ணிடுறாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் ரகசியமா வெச்சிருப்பாங்க. ரசிகர்களும் தியேட்டர் ஸ்க்ரீன்ல அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு ரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை. ஷூட்டிங்கில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்’கிற பேர்ல ஓப்பனா எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை தியேட்டர்ல பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது. 'இந்த சீனா? இதை எப்படி எடுத்தாங் கனு நான் நெட்லயே பார்த்துட்டேனே’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க. அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா!

மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கங்ணா!''

Popular Posts