Saturday, June 20, 2015

விஜய் ஸ்பெஷல் - திறமைகளை வளர்த்து சிகரத்தை தொட்ட விஜய்

 
 
மூன்றெழுத்து வார்த்தைத் தொடர்கள் சில உண்டு. அன்பு, பண்பு, பாசம், நேசம், அறிவு, திறமை, நட்பு, வெற்றி,அழகு,எம்ஜிஆர்,சிவாஜி, ரஜினி, கமல் என நீளும் அந்த பட்டியலில் இன்னும் ஒரு மூன்றெழுத்து உண்டு.
 
விஜய்.
 
காதலுக்கு மரியாதை படம் வந்த நேரத்தில் நான் என் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் மூத்த அண்ணன் சுப வைபவங்களின்போது வீடியோ, டெக் வாடகைக்கு விடும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு தோஷிபா டெக்கும், பிபிஎல் டிவியும் மற்றும் நூற்றுக்கணக்கான கேசட்டுகளும்தான் முதலீடு. புதுப்படங்கள் வெளிவரும்போது விளாத்திகுளத்தில் இருந்து கேசட் வாடகைக்கு வாங்கி வந்து அதை இன்னொரு கேசட்டில் பதிவு செய்து விட்டு திருப்பிக் கொடுப்போம். அந்த இன்னொரு கேசட் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போன மாதம் வெளியாகி சரியாக ஓடாத படமாகவும் இருக்கலாம். இல்லையென்றால் ஏதேனும் பழைய படமாகவும் இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் காதலுக்கு மரியாதை கேசட் மட்டும் அழிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
 
நான் கல்லூரிக்கு போக தொடங்கியிருந்தேன். வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவேன். அண்ணன் எப்பவும் போல வேலைக்கு போய்க் கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் நான்கைந்து படங்கள் வரிசையாய் வெளியாக அதை பதிவதற்கு நல்ல கேசட்-கள் தேவைப்பட்டது. ஆனால் என் அண்ணன் அப்போதும் காதலுக்கு மரியாதை படத்தை அழிக்கவில்லை. எனக்கோ ஆச்சர்யம். அவரிடம் சென்று,"அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குன்னு இதை நீ இன்னும் அழிக்காம வச்சிருக்க?" என கேட்க...
 
" இங்க பாரு.. இப்பவும் இந்த கேசட் வாடகைக்கு போயிக்கிட்டுதான் இருக்கு. அது முதல் காரணம். ரெண்டாவது நம்ம அப்பா விரும்பிப் பார்க்குற படங்கள்ல இதுவும் ஒன்னு. மூனாவது மருதநாயகம் ரிலீஸ் ஆகுறப்போதான் நான் இந்த கேசட்டை அழிச்சி மருதநாயகத்தை இதுல பதிவேன்.. போதுமா?" - என பதில் சொன்னான்.
 
எங்கள் ஊரை சுற்றி நிறைய தீப்பெட்டி தொழிற்சாலைகள் உண்டு. நாங்கள் வைத்திருக்கும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடையின் முக்கிய வாடிக்கையாளர்களே அதில் பணிபுரியும் பெண்கள்தான். என்னதான் இப்போது இணையம் வந்து ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள், வாட்சப் போன்ற மொபைல் போன் விஷயங்கள் வந்துவிட்டாலும் செல்போனே இல்லாத அந்த காலகட்டத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்புவது ஒரு முக்கிய கலாச்சாரமாகவே இருந்தது. அந்த வருடத்தில் பெண்கள் மனம் கவர்ந்த நடிகர் யார் என்பதை எல்லாம் நான் கருத்துக்கணிப்பு எடுத்தெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அந்த வருட பொங்கலுக்கு எந்த நடிகர் படம் போட்ட வாழ்த்து அட்டை நிறைய விற்கிறதோ அவர்தான் கனவுக் கண்ணன்.
 
1996-இல் வந்த பூவே உனக்காக வருவதற்கு முன்பாக நான் இதை கவனித்ததில்லை. ஆனால் சினிமா என்பது ஒரு ஊடகம் என்பதையும் தாண்டி அது பல இடங்களில் அடையாளமாக இருக்கிறது என்பது புரிய ஆரம்பித்த தருணத்தில் வந்த படம்தான் இது. விஜய் என்கிற மூன்றெழுத்தின் சக்தியை முழுதும் புரிய வைத்த படம் அது. "சொல்லாமலே யார் பார்த்தது.." பாடலில் விஜய் ஒரு வெள்ளை நிற உடை அணிந்திருப்பார். மெலிதான ஒரு புன்னகை அவர் உதட்டில் இருக்கும். மறக்க முடியாத புகைப்படம்  அது.அந்த அவருடம் எங்கள் கடையில் அதிக அளவு விற்ற புகைப்படம் அது. என் பள்ளித் தோழி ஒருத்தி கூட எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் அதே விஜய் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
 
காதலுக்கு மரியாதை படம் வெளிவந்தபோது மணிபர்சில் வைக்கும்  அளவிற்கான சினிமா புகைப்படங்கள் பிரபலமாக ஆரம்பித்தது. காதலுக்கு மரியாதை படத்தின் முக்கியமான எல்லா காட்சிகளையும் உள்ளடக்கிய புகைப்படங்கள் அப்படி விற்பனைக்கு வந்தது. நான் சொன்னால் நம்பமாட்டீர்கள்.. கிட்டத்தட்ட 40 புகைப்படங்கள் கொண்ட அந்த முழு செட்டை அவ்வபோது கடையில் இருக்கும் நானே அறுபதிற்கும் மேல் விற்றிருக்கிறேன். என் அண்ணன் எத்தனை விற்றான் என்பது அவனுக்கே வெளிச்சம். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் வாங்கினார்கள். ரசித்தார்கள்.
 
இப்படித்தான் விஜய் என்கிற சகாப்தம் எங்கள் கிராமங்களில் தொடங்கியது.
 
 
தமிழ் சினிமாவில் காதல் படங்கள் அதிகப்படியாக எடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். தொடர்ந்து விஜய்க்கு அமைந்த எல்லா வெற்றிப்  படங்களும் காதல் படங்களாகவே இருந்தன. லவ் டுடே,ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய் என தொடர்ந்த வெற்றிகள் அசைக்க முடியாத ஒரு நட்சத்திரமாக விஜய்யை உயர்த்திக்கொண்டிருந்தபோது அவர் நடித்த படம்தான் ப்ரியமுடன். ஒரு நெகடிவ் ஹீரோவாக அந்த காலகட்டத்தில் நடிக்க ஒரு தைரியம் வேண்டியிருந்தது. அது விஜயிடம் தாராளமாக இருந்தது. ஏனெனில் குறைந்தபட்ச வெற்றிவாய்ப்பு என்னும் அடிப்படையில் இன்னொரு ஃபீல் குட் காதல் படத்தில் அவர் நடித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் அதை தவிர்த்து இதைப்போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்ததே பெரிய விஷயம். பரிசோதனை முயற்சி என்பது கிலோகணக்கில் மேக்கப் அணிந்து, அடையாளம் தெரியாத ஆளாக நடிப்பது மட்டும் கிடையாது. இயல்பான கதாபாத்திரங்கள் மூலமும் பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதும் உண்மை. அதைத்தான் விஜய் செய்தார். ஆனால் எதிர்பார்த்த  அளவு அது மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பது வருத்தம்தான்!
 
எல்லா பெரிய நட்சத்திரங்களுக்கும் அவர்களின் ஆரம்ப காலப் படங்களுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் கிட்டும். துள்ளாத மனமும் துள்ளும் படம் மூலமாக அது விஜய்க்கு கிட்டியது. மதுரை சினிப்ரியாவில் வெளியான முதல் நாளில் தொடங்கி, நூறாவது நாள் அன்று சோலைமலையில் பார்த்தது வரை இந்தப்படம் ஒருமுறை கூட எனக்கு சலிப்பைத் தரவேயில்லை. குறிப்பாய் தன் தாய் இறந்த செய்தி கேட்டு பாத்ரூமில் அழும் காட்சி. நான் என் நண்பர்களிடம் ஒருமுறை சொன்னேன்..." ஸ்க்ரீன்ல கமல் அழுகுரப்போ ஒன்னும் தோணாது.. அதே ரஜினி அழுதாருன்னு வையேன்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்டா.. ஆனா யோசிச்சிப் பார்த்தா ரஜினி எப்பவாவது ஒரு படத்துலதான் அழுவாரு.. தளபதியில..படையப்பால.. இப்படி. அதே அளவு ஸ்க்ரீன்ல அழும்போது இம்பாக்ட் கொடுக்குற ஒரே ஸ்டார் விஜய்-தான்.. "
 
இன்று இதை எழுதும்போது யோசித்துப்பார்த்தாலும் கூட நான் சொன்னது நிஜம்தான் என்று தோன்றுகிறது.குறிப்பாய் ஷாஜகான் படத்தின் இறுதிக் காட்சியிலும், கத்தி படத்திலும் இது அப்படியே மாறாமல் நிகழ்ந்தது.
 
அப்புறம் ஒருநாள் திருமலை வெளியானது. பின்னர் அது திருப்பாச்சி, மதுரையாக மாறி கில்லியில் சொல்லி அடித்தது. அதன்பின்னரான விஜயின் வளர்ச்சி கில்லி படம் போலவே அவ்வளவு விறுவிறுப்பு நிறைந்தது. ஒரு சீரான வளர்ச்சியின் மிகப்பெரிய கொடை அவரின் இன்றைய இடம். படிப்படியாக தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு எந்த இடத்திலும் அவசரப்படாமல் நின்று நிதானமாக பெற்ற இடம் இது.
 
ஆனால் திருமலை வந்த காலகட்டத்தில் என் நண்பர்கள் சிலர்  கோபம் கொண்டனர்.  காரணம் குஷி போன்ற படங்களில் இருந்த அந்த ஸ்மார்ட்டான, கியூட்டான விஜயை இனிமேல் பார்க்க முடியாது என்கிற கோபம். இதில் சில விஷயங்களை நான் சொல்லியே ஆகவேண்டும்.
 
எப்போதெல்லாம் விஜய் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க விழைகிராறோ அப்போதெல்லாம் தோல்வியே அவருக்கு கிடைத்திருக்கிறது. ப்ரியமுடன் படத்திற்கு பிறகு கண்ணுக்குள் நிலவு. இதுவரை வந்த விஜய் படங்களிலேயே மிகச்சிறந்த பாடல்கள் அடங்கிய படம் இதுதான். ஷாலினி, ரகுவரன் போன்ற அற்புதமான நடிகர்கள், பாசில் போன்ற திறமையான இயக்குனர் இருந்தும் படம் தோல்வியை தழுவியது. ஆனால் எப்போதுமே உடனே திரும்ப எழும் குணம் கொண்டவர் விஜய். அதை குஷியில் நிரூபித்தார். பிரெண்ட்ஸ் படத்தில் அதை அழுத்தமாக மக்கள் நெஞ்சில் பதித்தார். யூத், வசீகரா போன்ற படங்களில் மிக இயல்பாய் அதை தொடர்ந்தார். அதேபோல் சச்சின். இதுவும் அந்த நேரத்தில் அவர் ரிலாக்சாக நடித்த படங்களில் ஒன்று. அப்படியே பழைய ரசிகன் விஜய் இதில் இருப்பார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
 
விஜய் ஆரம்ப காலங்களில் ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரின் சிறந்த ஆக்ஷன் படங்கள் திருமலைக்கு அப்புறமே  வெளியானது.ஆனால் அதிகளவு விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் இந்த காலகட்டங்களில்தான். அதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் ரசிக்கும் நடிகராக விஜய் மாறி இருந்ததுதான்! குழந்தைகளுக்கு பிடித்த எந்தவொரு நடிகரும் இதுவரை தோல்வி அடைந்ததே இல்லை என்பது வரலாறு. ஆனால் அதே நேரத்தில் குழந்தைகள் உன்னிப்பாய் கவனிப்பதால் அவர் படங்களில் எதிர்பாராமல் இடம்பெறும் ஆபாச காட்சிகளும், அதீத வன்முறை கொண்ட காட்சிகளும் மிக எளிதாக எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதில் நேர்மையான பல விமர்சனங்களும் கூட உண்டு. அதை விஜய் எந்தளவுக்கு தன் படங்களில் அடுத்தடுத்து எடுத்துச் செல்வார் என்பதைப் பற்றிய சிந்தனையில் நியாயம் இருக்கிறது.
 
குறிப்பாய் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள்  தரமான பொழுதுபோக்கு படங்கள். அதோடு சேர்ந்து சில முக்கியமான அன்றாட சமூக விஷயங்களை அழுத்தமாக சொன்ன படங்கள். இப்படங்களின் வெற்றியில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் எவருக்கும் இருக்கவே முடியாது. பகைவரும்  ரசிக்கும் படமாக இவற்றை நான் கூறுவேன்.இதைத்தான் விஜய் தன் அடையாளமாக இனி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இயல்பான சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருக்கமுடியும்.
 
வெற்றிபெறுவதை விட அதை தக்கவைப்பது மிகப்பெரிய சவால். விஜய் மிகத் தெளிவாக அதை செய்கிறார். விஜய் படமில்லாத ஒரு பொங்கல், தீபாவளியே கிடையாது என்பதே அதற்கு சான்று. அதாவது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் எல்லாம் அவர் படங்கள் வெளிவந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றன. ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு அபரிதமானது என்பதை நான் தனியாக இங்கே சொல்வதற்கில்லை. அது தமிழகம் அறிந்தது.
 
மேலும் வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து தன்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகிக்கொண்டே இருப்பதை ஒரு பழக்கமாக  வைத்திருக்கிறார் விஜய். சமூக வலைத்தளங்கள் சினிமாவின் பொருளாதார ரீதியிலான முடிவை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக மாறிவிட்ட காலகட்டங்களில் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் சிந்தனை செய்யாமல் தன் மேலும், தன்னோடு பணிபுரியும் தொழிநுட்ப கலைஞர்கள் மேலும் நம்பிக்க வைத்து தொடர்ந்து தன் பாதையில் மக்களை மகிழ்விக்கிறார்.
 
"தம்மாதுண்டு ப்ளேடு மேல வச்ச நம்பிக்கையை உன் மேல வை.. ஜெயிக்கலாம்..." என்கிற அவரின் வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இவருக்கு மிகவும் பொருந்தும்.
 
நீண்ட பயணம் ஒன்றின் மத்தியில் இப்போது விஜய் இருக்கிறார். அடுத்து வரப்போகும் படங்கள் தொடர்ந்து அவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் என்கிற முழுநம்பிக்கையில் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு சொல்லிக்கொள்வதில் ஒரு சினிமா ரசிகனாக பூரிப்படைகிறேன்.
 
courtesy: :  http://www.indiaglitz.com/

No comments:

Post a Comment

Popular Posts