Sunday, January 23, 2011

கணக்கு தீர்க்க தயாராகும் காவலன்!

"நான் திருப்பதிக்கு போயிருந்தப்போ ஒரு நிமிட நேரம் கூட நின்று தரிசனம் பண்ண முடியல. கவலையோட வெளியில் வந்தப்போ, அதே திருப்பதி நிர்வாகம் சார்பா உள்ளே அழைக்கப்பட்டு பத்து நிமிடம் சாமி முன்னாடி நின்னு மனமுருக பிரார்த்தனை பண்ணுற பாக்கியம் கிடைச்சது. தினமும் ஒரு பக்தரை திடீர்னு தேர்ந்தெடுத்து அவங்களுக்கு இப்படி ஒரு வாய்பை ஏற்படுத்தி தர்றது திருப்பதி தேவஸ்தானத்தின் வழக்கம். இந்த திடீர் தரிசனம் எப்படி எனக்கு பரவசத்தை கொடுத்திச்சோ, அதே அளவு பரவசத்தை விஜய் படமான காவலனை வாங்கிய போதும் உணர்ந்தேன்" என்று விஜய்யை வைத்துக் கொண்டே அவரை பெருமாளாக சித்தரித்தார் காவலன் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருந்த ஷக்தி சிதம்பரம்.

ஷக்திக்கு விஜய் பெருமாளாக தெரிந்த மாதிரி, விஜய்யின் கண்களுக்கும் ஷக்தி தெரிந்தார். ஆனால் பெருமாளாக அல்ல, தனது இமேஜையும், ராஜ பாட்டையையும் அடைத்துக் கொண்டு நிற்கிற நந்தியாக!

தமிழ்சினிமா வியாபாரத்தில் பெரும் அனுபவசாலியான விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே தடுமாறுகிற அளவுக்கு சிக்கல் உருவானது எப்படி? கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்களிடம் பேசினோம். கிடைத்த தகவல்கள் விஜய்யின் ஆக்ஷன் படங்கள் போலவே செம விறுவிறுப்பு.

காவலன் பட அலுவலகம் இருக்கிற அதே பில்டிங்கில்தான் ஷக்தி சிதம்பரத்தின் அலுவலகமும் இருக்கிறது. காவலன் பட தயாரிப்பாளர் ரொமேஷ்பாபுவை அடிக்கடி சந்திக்கிற போது ஏற்பட்ட பழக்கம், திடீரென்று ஒரு நாள் பத்து கோடி ரூபாயுடன் ரொமேஷை சந்தித்த ஷக்தி சிதம்பரம், காவலன் வெளியீட்டு உரிமையை எனக்கு கொடுங்களேன் என்று கேட்டார். 42 கோடி ரூபாய் விலை பேசினார்கள். பத்து கோடியுடன் இன்னும் ஏழு கோடி பைனான்ஸ் வாங்கி படத்தை கைமாற்றிக் கொண்டார் ஷக்தி சிதம்பரம். எல்லாம் சரியாகதான் போய் கொண்டிருந்தது.

மீதி பணத்தை புரட்டிக் கொடுக்க வேண்டுமே? அங்கங்கே படத்தை விலைபேசி அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்தார் ஷக்தி சிதம்பரம். இந்த பதினேழு கோடி போக மேலும் அவர் வசூலித்த தொகையான ஒன்பது கோடிகளை தன் பழைய கடன்களை அடைக்க பயன்படுத்திக் கொண்டாராம் அவர்.

ரிலீஸ் நேரத்தில் காவலன் ஏரியாவுக்காக பணம் கொடுத்தவர்கள், நெகட்டிவ் ரைட்சுக்காக பணம் கொடுத்தவர்கள், வட்டிக்கு கொடுத்தவர்கள் என்று ஆளாளுக்கு சூழ்ந்து கொண்டு அனல் கிளப்ப ஆரம்பித்தார்கள். நீதிமன்றம் போனது ஒரு கூட்டம். நிஜத்தில் ஷக்தி சிதம்பரத்தை வளைத்துக் கொண்டு தாக்கியது இன்னொரு கூட்டம். இது போதாதா... காவலன் பொங்கலுக்கு திரைக்கு வராது என்ற தகவலும் சேனலில் வருகிற பிளாஷ் நியூஸ் வேகத்தில் பரப்பப்பட்டது. அப்புறம் நடந்ததெல்லாம் ரத்தம் உறைய வைக்கும் பயங்கரங்கள் என்றார்கள் காவலன் விஷயத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட சினிமாவுலக முக்கியஸ்தர்கள்.

அதை அவர்கள் விவரிப்பதற்கு முன் நமக்கு கிடைத்த வேறு சில தகவல்கள் அதி முக்கியமானது. காவலன் பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய படமே அல்ல. கடந்த மாதமே வந்திருக்க வேண்டும். மன்மதன் அம்பு ரிலீஸ் நேரத்தில் காவலன் வெளி வந்துவிடக் கூடாது என்று நினைத்தவர்கள் அந்த நேரத்தில் முட்டுக்கட்டை போட்டார்களாம்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தையும் கடந்த மாதமே ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்ததாம் சன் பிக்சர்ஸ். அவர்களிடம் நேரடியாக பேசி தன் மருமகன் படத்தை தள்ளிப் போட வைத்தாராம் ரஜினி. ஏன்? எந்திரன் வெளிவந்து 49 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அந்த விளம்பரங்களை நிறுத்திவிட்டு ஆடுகளம் விளம்பரங்களை ஆரம்பிக்க வேண்டுமா? கொஞ்சம் யோசிங்களேன் என்றாராம். அதன் காரணமாக அவர்களும் ரிலீசை தள்ளிப் போட, ஆடுகளத்திற்கும் காவலனுக்கும் நேரடி முட்டல் ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

இந்த நேரம் பார்த்துதான் கலைஞரின் கதை வசனத்தில் பா.விஜய் நடிக்கும் இளைஞன் படமும் கோதாவில் குதித்தது. கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை விநியோகஸ்தர்கள் துணையில்லாமல் நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அநாதையாக நிற்கும் பருவக்குமரியை ஹைஜாக் பண்ண துடிக்கும் முரட்டு வில்லன்கள் போல தியேட்டர்களை கைப்பற்றுவதில் படு பயங்கர யுத்தம் துவங்கியது. மற்ற தயாரிப்பாளர்கள் ஸ்டிராங்காக இருக்க, படு வீக்காக இருந்தவர் ஷக்தி சிதம்பரமும், ரொமேஷ் பாபுவும்தான்.

மதுரை ஏரியாவை வாங்கியிருந்தார் பிரபல விநியோகஸ்தரும் பைனான்சியருமான அன்புச் செழியன். என்எஸ்சி ஏரியாவை வாங்கியிருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். டி.கே.ஏரியாவை வாங்கியிருந்தார் மைக்கேல் ராயப்பன். பஞ்சாயத்தில் இவர்கள் இறங்கியதும்தான் படம் வெளிவரும் என்ற நம்பிக்கையே வந்தது தியேட்டர் வட்டாரத்தில். ஆனால் இவர்களையும் தாண்டி வேறு வேறு வகையில் லேப் நிர்வாகத்தை மிரட்ட ஆரம்பித்தார்களாம் சிலர்.

படப்பெட்டி வெளியேறுகிற அந்த இரவு ரொம்பவே டென்ஷனாக கழிந்தது என்றார்கள் இந்த விவகாரத்தை அருகில் இருந்து கண்காணித்த சிலர் நம்மிடம். லேப்புக்கு பதினைந்து கோடியை கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். படம் வாங்குவதற்காக பேசிய தொகையைவிட அதிகம் கொடுத்தால்தான் காவலன் வெளியே வரும் என்ற நிலையில், மூன்று தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதற்காக முன்பணம் கொடுத்திருந்த திமுக எம்.எல்.ஏவான வி.எஸ் பாபு திடீரென்று தன் பரிவாரங்களுடன் லேப்புக்கு வந்தார். தான் கொடுத்திருந்த முன் பணமான இரண்டரை கோடியை திருப்பிக் கொடு என்றார். ஏற்கனவே தட்டுப்பாடு. இதில் பணத்தை திருப்பிக் கேட்டால் என்ன செய்வது? (கடைசி நேரத்தில் விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் ஒரு கோடி ரூபாயும், மைக்கேல் ராயப்பன் சில கோடிகளும் போட்டு சென்னை நகர விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார்கள்) இவரைப் போலவே படம் வெளியே வராது என்ற தகவலால் மற்ற விநியோகஸ்தர்களும் தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி தரச்சொல்லி மல்லு கட்ட ஆரம்பித்தார்கள்.

எப்படி எப்படியோ சமாளித்து கடைசியாக எஸ்.ஏ.சந்திரசேகர் மூன்று கோடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து படப்பெட்டி வெளியே வந்துவிடும் என்ற நிலை. இதை பேசி முடிக்கிறபோது நள்ளிரவை தாண்டி அதிகாலை ஆரம்பித்திருந்தது. எஸ்.ஏ.சி எத்தனை கோடிக்கு செக் கொடுத்தாலும் அதை நம்பலாம் என்று கூறிய லேப் நிர்வாகம், அடுத்த அரை மணி நேரத்திலேயே "செக் வேண்டாம். பணமாக கொடுங்கள்" என்று செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டதாம். அந்த விடியற்காலை நேரத்தில் எங்கு போய் பணம் புரட்டுவது? பணம் புரட்ட போனவர்கள் திரும்பி வர காலை ஒன்பது மணி ஆகிவிட்டது.

இந்த சில மணித்துளி தாமதங்களை கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் சிலர். மீண்டும் படம் வெளிவராது என்ற தகவல் எஸ்எம்எஸ் மூலம் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது. காவலன் வராது என்ற பொய் தகவலை பரப்பிய அவர்கள், என்ன நினைத்து பரப்பினார்களோ. அதுதான் நடந்தது. காவலன் வரவேண்டிய பல தியேட்டர்களில் வேறு படம் வந்தது.

இதற்கிடையில் படப்பெட்டியும் வெளியே வந்தது. மதுரை ஏரியாவை வாங்கியிருந்த அன்புச்செழியன் சென்னையிலிருந்து விமானத்தில் பெட்டியை ஏற்றி அனுப்பியதுடன், சுற்று வட்டார தியேட்டர்காரர்களை காருடன் விமான நிலையத்திற்கே வந்து காத்திருக்க சொன்னாராம். இந்த முன் ஜாக்கிரதையையும் மீறி டிஜிட்டல் தியேட்டர்களுக்கு சாட்டிலைட் மூலம் திரையிடப்படும் முறையிலும் ஏக குளறுபடி ஏற்படுத்த முயன்றார்கள் சிலர்.

யுஎப்ஓ என்ற நிறுவனத்தின் மூலம்தான் இந்த வசதி அளிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இதில் பங்குதாரராக இருந்தவர் இளைஞன் பட தயாரிப்பாளர் மார்ட்டின். இந்த அலுவலக ஊழியர்கள்தான் ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி படத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த என்ஜினியர்களும் வேண்டுமென்றே தாமதமாக அனுப்பப்பட்டதால் தென் மாவட்டங்களில் பல தியேட்டர்களில் ஒரு ஷோ போடுகிற நேரமே கட் ஆனதாகவும் குமுறுகிறார்கள் விஜய் தரப்பில்.

இதற்கிடையில் காவலன் ஓடுகிற தியேட்டர்களில் அப்படத்தை து£க்கிவிட்டு இளைஞன் படத்தை திரையிட சொல்லி சிலர் பிரஷர் செய்வதாக ஒரு தகவல் கசிகிறது. இது உண்மையா என்ற கேள்வியுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் திருச்சி ஸ்ரீதரை தொடர்பு கொண்டோம்

அப்படி நடப்பதாக எங்கள் காதுக்கு எந்த தகவலும் வரலை என்றவர் தொடர்ந்து சில Kavalanவிஷயங்களை பகிர்ந்து கொண்டார். ரஜினிக்கு பிறகு கலெக்ஷன் ஹீரோ என்றால் அவர் விஜய்தான். காவலன் படம் வெளிவருவதில் ஏற்பட்ட குழப்பம் முழுக்க முழுக்க பணப் பிரச்சனைதான். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காவலன் படத்தை எடுத்துவிட்டு இளைஞன் படத்தை திரையிடும்படி யாரையும் யாரும் வற்புறுத்தியதாகவும் சொல்ல முடியாது. கோவையில் இருக்கிற ராயல் தியேட்டரில் இளைஞன் படத்தை திரையிட்டிருந்தார்கள். அது ஏசி இல்லாத தியேட்டர். தலைவர் படத்தை ஏ.சி தியேட்டர்ல ரிலீஸ் செய்ங்க என்று அமைச்சர் பொங்கலு£ர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். அதையடுத்து அருகில் இருந்த கே.ஜி.காம்பளக்சுக்கு இளைஞன் மாற்றப்பட்டது. இளைஞன் விஷயத்தில் இது ஒன்றுதான் நடந்தது என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

திரையுலக முக்கியஸ்தர்களில் திமுக அபிமானிகள் சிலரிடம் விசாரித்தோம்.

திரையுலகத்தில் ஷக்தி சிதம்பரத்தின் நிலைமை என்ன என்று தெரிந்தே அவரிடம் படத்தை விற்றதுதான் காவலன் குழப்பத்திற்கு மொத்த காரணம். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு பிரச்சனையை அரசியலாக்கி ஆளும் கட்சி மீது பழியை போட்டு சுய லாபம் தேட முயல்கிறார் எஸ்.ஏ.சி என்றார்கள் ஆவேசமாக.

இத்தனை விஷயங்கள் இப்பட விவகாரத்தின் பின்னணியில் இருந்தாலும் கொஞ்சம் சிரத்தையோடு கவனித்தால் விஜய்யை அவரது இமேஜை டேமேஜ் செய்ய அரசியல் பலம் கொண்ட சிலர் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது புரியும். விஜய்க்கும் இது தெரியும். அதனால்தான் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள தனது ரசிகர் மன்ற மாநாட்டில் இதற்கெல்லாம் பதிலடி தர நினைக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

அம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக விஜயகாந்த்தை அழைத்து பேச வைத்து தனக்கு குடைச்சல் கொடுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்களை ஒரு கை பார்க்கவும் தயாராகிறாராம் விஜய்.

நன்றி - தமிழக அரசியல் வார இதழ்

No comments:

Post a Comment

Popular Posts