Friday, June 19, 2009

நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி - தினத்தந்தி

இன்னும் முடிவு எடுக்கவில்லை
"அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடந்தது உண்மைதான்''
நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன்.19-

"நான், அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தியது உண்மைதான். ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை'' என்று நடிகர் விஜய் கூறினார்.

பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் சமீபகாலமாக தகவல்கள் பரவியது. இதுபற்றி விஜய்யிடம், `தினத்தந்தி' நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து விஜய் கூறியதாவது:-

``என் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், ரசிகர்கள்தான். அவர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அதன் அடையாளமாக தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

அரசியல்

நற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம். இதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

கருத்து

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

விஜயகாந்த்

இதுதொடர்பாக எங்க அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில், ``விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி விஜயகாந்த் பயப்படுகிறார்'' என்று கூறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பொதுவாகவே நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லி பேசுவது இல்லை. என்றாலும் அப்பாவிடம் இதுபற்றி கேட்டேன். ``நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.

அண்ணன் விஜயகாந்த், என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.''

இவ்வாறு விஜய் கூறினார்.

1 comment:

  1. Thanks for the News, It is good he not enter political right now.

    ReplyDelete

Popular Posts